Wednesday, April 29, 2009

பொன்னுத் தொட்டான்

நண்பர் கல்பட்டு நடராஜன் 80+ வயது இளைஞர்.
சமீபத்தில் நான் அங்கத்தினராக இருக்கும் குழு ஒன்றில் தொடராக பறவைகள் பற்றி எழுதினார்.

அருமையான விஷயங்கள்!

அதில் ஒரு பதிவை பாக்கலாமா?
(போட்டோ நான் எடுத்தது இல்லை.நண்பர் வலையில் சுட்டது. http://upload.wikimedia.org/wikipedia/commons/7/7d/Pitta_brachyura.jpg
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பஞ்சவர்ணக் கிளி பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள், பார்த்து இருப்பீர்கள். ஒன்பது வர்ணக் குருவி பார்த்திருக்கிறீர்களா?


பொன்னுத் தொட்டான் என்று ஒரு குருவி. ஆங்கிலத்தில் இதன் பெயர் Pitta (Scientific name – Pitta brachyura). ஹிந்தியில் இதன் பெயர் நவ்ரங் அதாவது ஒன்பது வர்ணம்.


தரையில் இரை தேடும் பொன்னுத் தொட்டான்


எண்ணிப் பார்த்தீர்களா ஒன்பது வர்ணங்களை? வான வில்லின் ஏழு நிறங்களுடன் கருப்பு வெள்ளை இரண்டும் சேர்ந்து ஒன்பது ஆகிறது.


பொன்னுத் தொட்டான் தமிழ் நாட்டில் நம் தோட்டங்களுக்கு வருடா வருடம் குளிர் நாட்களில் வரும் ஒரு குருவி. மற்ற நாட்களில் இது வட இந்தியாவுக்கும் மத்திய பிரதேசத்திற்கும் சென்று விடுகிறது.


எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு வருடா வருடம் ஒரு பொன்னுத் தொட்டான் வந்து கொண்டிருந்தது. என்ன காரணமோ இவ்வருடம் ஏப்ரல் மாதம் வட இந்தியாவுக்குப் பயணிக்காமல் தங்கி விட்டது. சுட்டெரிக்கும் வெய்யில் தாங்காமல் ஒரு நாள் செத்து விழுந்து விட்டது. இனி எங்களுக்கு வீட்டில் இருந்தபடியே பொன்னுத் தொட்டானைப் பார்க்கும் இன்பம் கிட்டாது. வீட்டுத் தோட்டத்திலே பறவைகள் குடிக்க / குளிக்க ஒரு சிறிய நீர்த் தொட்டியை முன்னரே அமைத்திருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாமோ என்னவோ?


இவ்வாறு கோடையில் வெப்பம் தாங்காது இறக்கும் பறவைகளைக் காப்பாற்ற நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா?


உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால் அதில் பறவைகள் குளிக்க, நீர் அருந்த வசதியாக ஒரு சிறிய தொட்டி அமைத்து அதில் தண்ணீர் விட்டு வையுங்கள்.


ஒன்றை மறந்து விடாதீர்கள். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை மாற்றுங்கள். இல்லையென்றால் நீங்கள் கொசு வளர்ப்பிற்கு உதவி செய்வீர்கள். மலேரியா, டெங்யூ, சிகன் குன்யா போன்ற வியாதிகள் பரவ உதவுவீர்கள் உங்களை அறியாமல்.


உங்கள் வாகனங்களில் ஈய ரசாயனம் கலந்த பெட்ரோலை உபயோகிக்காதீர்கள்.


நீங்கள் ஒரு விவசாயியாக இருந்தால் உங்கள் நிலங்களில் ரசாயனப் பூச்சி கொல்லி மருந்துகளுக்கு பதிலாக வேப்பம் புண்ணாக்கினையோ அல்லது அதிலிருந்து தயாரிக்கப் பட்ட கலவைகளையோ உபயோகியுங்கள்.

1 comment:

ராமலக்ஷ்மி said...

அழகான குருவி பொன்னுத் தொட்டான்.
அதன் சோக முடிவு வருத்தம் தருகிறது.

விவரங்களும் நல்ல பரிந்துரைகளும் கொண்ட பதிவினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி திவா.

Blog Archive

சித்திரத்தோட பேசினவங்க!

Followers